VJ சித்ரா தற்கொலை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் VJ சித்ரா. இவர் சின்னத்திரையில் நடிக்க வருவதற்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

அதனை தொடர்ந்து சின்ன திரையில் ஒரு ரவுண்டு வந்தவர், “கால்ஸ்” என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நாசரேத்பேட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கணவர் ஹேமந்த் கைது
VJ சித்ராவின் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த அவரது தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த்துதான் காரணம் என்று புகார்கள் அடுக்கப்பட்டன. மேலும் விஜே சித்ராவின் பெற்றோர் ஹேமந்த் தனது மகளை மிகவும் துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளிக்க ஹேமந்த் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். மேலும் சித்ராவின் தற்கொலை சம்பந்தமாக 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

எனினும் சித்ரா கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறி ஹேமந்த் உட்பட அந்த 7 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் விஜே சித்ராவின் தந்தையான காம்ராஜ் தனது மகளின் மரணத்திற்கு காரணமானவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லையே என பல நாட்களாக வேதனையில் இருந்ததாக கூறுகின்றனர்.
சித்ராவின் தந்தை தற்கொலை

இந்த நிலையில் விஜே சித்ராவின் தந்தையான காம்ராஜ் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஜே சித்ராவை போலவே இவரது தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காம்ராஜின் தற்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.